Facebook Page

.

நூறாண்டைக்கடந்த இந்திய சினிமா


கடந்த மே மாதம் 3ஆம் தேதி இந்திய சினிமாவின் நூற்றாண்டு தொடங்குகிறது. 1895 டிசம்பரில் லூமியர் சகோதரர்கள் பாரீசில் தாங்கள் தயாரித்த உலகின் முதல் சினிமா திரையிடப்பட்ட ஆறு மாதத்திற்குள்ளாகவே அதே படம் இந்தியாவில் திரையிடப்பட்டிருந்தாளும் கூட,  இராஜா ஹரிச்சந்திரா என்கிற படத்தை தாதா சாகேப் பால்கே அவர்கள் முதல் முதலில் தாயாரித்து திரையிட்ட மே 3 1913 தான் இந்திய சினிமாவின் பிறப்பாகும். வங்க மொழியில் உருவான இப்படம் மெளனப்படமாக உருவாகி அதன் பின் காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் இந்திய சினிமா துறை வளர்ச்சி அடைந்தது, இன்று இராஜா ஹரிச்சந்திராவின் உருவாக்கத்தையே “ஹரிச்சந்திரா பேக்ட்டரி” என்கிற சினிமாவாக அதே காலகட்டத்தை முன் வைக்கும் கலைநுட்பத்தோடு விளக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சினிமாவை கண்டுபிடித்தது இந்தியர்கள் இல்லையென்றாலும் இந்தியர்கள் தான் உலக அளவில் அதிக அளவு சினிமாக்களை தயாரித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா என்று பல்வேறு விதமான மொழிகளில் தயாராகும் இந்திய சினிமா உலகிலேயே மிகப்பெரியதாகும். இந்திய சினிமா எப்படி உருவானது என்பதே ஒரு சுவாரசியமான கதை.



1896ல் இந்தியாவில் முதல் சினிமா திரையிடப்பட்ட நாள் முதல் 1913 வரை இந்தியாவில் வெளிநாட்டுப்படங்கள் திரையிடப்பட்டாளும் பெரும்பாலான இந்தியர்களுக்கு சினிமா என்றால் என்ன? என்றே தெரியாமல் இருந்தனர். அது பெரு நகரங்களில் வாழும் மனிதர்கள் பார்க்கும் ஊடகமாக மட்டுமே இருந்தது. 1896 – 1913 வரை மெளனப்பட உருவாக்கத்தில் சாவேதாதா F.B. தானாவாலா, ஹரிலால், பேராசிரியர் ஸ்டீவன்சன் போன்றோர் முயற்சிகள் பல செய்தாலும் தாதா சாகேப் பால்கே தான் முதல் மெளனப்படத்தை உருவாக்கினார். பால்கே 1870களில் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில்  ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.  இவரது தந்தை சமஸ்கிருத பண்டிதர். ஓவியத்தில் ஆர்வமிகுதியால் பரோடாவில் உள்ள ஓவியப்பள்ளியில் ஓவியம் மற்றும் சிற்பம் பயின்றுள்ளார். அதன் பின் புகைப்படக்கலைஞராக பணியாற்றுவிட்டு, அகழ்வாய்வுத்துறையில் வரைபடக்கலைஞராக பணியாற்றியுள்ளார். அதன் பின் மேஜிக் கலைஞராக வேலை பார்த்திருக்கிறார். அதன் பின் இராஜா ரவிவர்மாவோடு லித்தோகிராப் வரைவதற்கு உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். இது எதுவும் பிடிக்காமல் ஜெர்மன் சென்று அச்சகத்தொழிலைக்கற்றுக்கொண்டு, மும்பையில் ஒரு அச்சகமும் நடத்தி இருக்கிறார். இத்தனையும் செய்து பார்த்து முடித்தப்பின் தான் பால்கே இந்திய சினிமாவை கண்டறிந்தார். இது எதற்கு சொல்கிறோம் என்றால் ஓவியம், புகைப்படம், வரைகலை, அச்சுத்தொழில் என்று எல்லாமே தனித்தனியான கலைகள் தான். ஆனால் ஒரு சினிமா எடுப்பது என்பது இதோடு இன்னும் சில கலைகளும் இணைந்து, தொழில் நுட்பத்தோடு தரப்படும் ஒரு கலையாகும். அவருடைய பல கலை அனுபவம் தான், அவரை இறுதியாக ஒரு மகத்தான கலையை கண்டறிய உதவியது.


இந்தியாவின் முதல் திரைப்படம் “ராஜா ஹரிஷ்சந்திரா”

பால்கே அவர்கள் 1910 டிசம்பர் 24ஆம் தேதி காளை சண்டை குறித்த மெளனப்படம் ஒன்றைபார்தார். அந்தப்படம் தான் திரைப்படம் என்று அவர் முதலில் பார்த்ததே. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள் மறு நாள் இயேசு சிலுவையில் அரையப்படுவது குறித்தப்படத்தைப்பார்த்தார். இந்தப்படம் தான் பின்நாளில் பால்கே அவர்கள் உபகரனங்களை வாங்கி படம் எடுக்க திட்டமிடும் பொழுது, ”வெள்ளைக்காரர்கள் அவர்களின் தெய்வத்தை வைத்து படம் எடுப்பதைப்போல் நம் நாட்டுக்கடவுள்களான இராமன், விஷ்ணு குறித்து நாம் படம் எடுக்கலாம்” என்று தொடங்கிய விவாதம், இராஜா ஹரிச்சந்திராவில் வந்து முடிந்தது. இந்தப்படம் எடுக்கும் அவரது முயற்சியில் அவருக்கு இடையில் ஒருமுறை கண்பார்வையே போனது. பொருளாதார நெருக்கடி மிகுந்த குடும்பம் என்றாலும், அவருக்கு சினிமா மீது இருந்த காதல் அவரை லண்டன் வரை சென்று கேமிராவை வாங்கிக்கொண்டு வரும் அளவிற்கு துணிவைக்கொடுத்தது. இந்தப்பட முயற்சிக்கு பணம் திரட்டிக்கொண்டிருந்த பால்கே இந்தூர் அரசி ஸ்ரீமத் தல்சிகர் மேம்சாபிடம் மட்டும் ரூ.5000 பண உதவியாய் பெற்றார். திலகரிடம் கூட உதவி பெற்றார். இறுதியாக ரூ.8000 வரை பணம் திரட்டினார். இராஜா ஹரிச்சந்திராவில் தனது குடும்பத்தைச்சேர்ந்த 18 பேரையும் பால்கே நடிக்க வைத்தார். உணவு ஒத்தைகை என்று எல்லாவற்றையும் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஈடுபட்டார். உழைப்பு, உழைப்பு என்று சதாசர்வ காலமும் அவர் மேற்கொண்ட உழைப்புதான் அவரின் முதல் முயற்சியை வெற்றியடைய செய்தது. இதுவே அவர் பெயரால் இன்று இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுக்கான காரணம். பால்கே  ஐதீக பிடிப்புகொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் தனது குலத்தொழிலை தூக்கி எரிந்தவர். தனது படங்களில் தேசிய உணர்வுகளை, சமூக விமர்சனத்தை பூடமாக வைத்தவர். அவரது படங்களில் விண்ணிலிருந்து வரும் கடவுளை பிராமணர்களும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் ஒன்றாக வரவேற்பதாக காட்சிகளை அமைத்தவர். இது அன்றைய நாளில் புதுமையாக மட்டுமல்லாமல் முற்போக்கான அம்சமாகும்.

                                       ராஜா ஹரிஷ்சந்திரா படத்தின் சான்றிதழ்

தொடக்க காலங்களில் சினிமா பார்ப்பதே பாவம் என்று சில நம்பிக்கைகளும் இருந்துள்ளன. அப்போது சினிமாவில் நடிப்பது கேட்கவே வேண்டாம். அதிலும் பெண்கள் நடிக்க வரவே மறுத்தனர். விலைமாதுக்கள் கூட சினிமாவில் நடிக்க அஞ்சினர். இதன் காரணமாகவே இந்தியாவின் முதல் படமாண இராஜா ஹரிச்சந்திராவில் முழுவதும் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர். 1918ல் உருவான தென்னிந்தியப்படமான திரெளபதி வஸ்திராபரணம் என்னும் படத்தில் திரெளபதியாக நடித்தவர் வயலெட்பெரி என்னும் வெள்ளைக்காரப்பெண்மணி. 1926ல் உருவான அனார்கலி எனும் திரைப்படத்தில் நடிக்க ருபிமேயர்ஸ் என்ற யூதப்பெண்ணை சுலோசனா என்று பெயர்மாற்றி நடிக்க வைத்தனர். அதே காலகட்டத்தில் உருவான கெளதம புத்தரின் வாழ்வைக்கூறும் ‘லைட் ஆப் ஏசியா’ என்கிற படத்தில் கெளதமரைக்காதலிக்கும் இளவரசி கோபாவாக சீதாதேவி என்ற நடிகை அறிமுகமானார். ரெனீஸ்மித் என்கிற ஆங்கிலோ இந்தியப்பெண்மணியின் பெயரைத்தான் சீதா தேவி என்று பெயர் மாற்றி நடிக்க வைத்தனர். நடிக்க வரும் பெண்களுக்கு பெயர் மாற்றுவது என்பது சினிமா தொடங்கிய காலத்திலேயே உருவாகிவிட்டது. என்ன வேறுபாடு என்றால், அன்று வேறு ஊர் பெண்களுக்கு நம்ம ஊர் பெயர்களை வைத்தார்கள்; இன்று நம்ம ஊர் பெண்களுக்கே வேற்று மொழிப்பெயர்களை வைக்கிறார்கள். அதே போல் நடிகைகள் இறக்குமதியும் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது. இதுவும் அன்று நம்ம ஊர் பெண்கள் நடிக்க வராததால் வேறு வழியின்றி தேவைகருதி வரவழைத்தனர். ஆனால் இன்று அவையும் வலிந்து திணிக்கப்படுகிறது.

அதே போல் வணிகரீதியாகவே இந்திய சினிமா தொடக்கம் முதலே இருந்துள்ளது. இராஜா ஹரிச்சந்திராவை பார்த்து லண்டன் சினிமா ரசிகர்கள் பலர் வியந்து பாராட்டினர். அன்றைக்கு வந்து பல ஐரோப்பிய பத்திரிக்கைகள் இராஜா ஹரிச்சந்திராவையும், பால்கேவின் கலைத்திறனையும் வெகுவாக பாராட்டின. அந்தப்படத்தைப்பார்த்த ஐரோப்பிய தயாரிப்பாளர்கள் பால்கேவை லண்டனில் வந்து படம் எடுக்க அழைத்தனர். ஆனால் பால்கே மறுத்து விட்டார். அடுத்ததாக அவர் உருவாக்கிய லங்கா தகனம் படம் மிகப்பெரும் வெற்றியைப்பெற்றது. கூட்டம் நிரம்பி வழிந்ததால் அன்றே ஐந்து காட்சிகளாக திரையிடல் மாற்றப்பட்டது. முதல் பத்து நாளில் மட்டும் ரூ.32000 வரை வசூல் ஆனது. இது அந்த காலத்தில் மிகப்பெரும் வசூல். சென்னை உள்ளிட்ட மற்ற பெரு நகரங்களிலும் இதுதான் நிலை. படத்தின் மிகப்பெரிய பொருளாதார வெற்றி, பல பெரும் இந்தியப்பணக்காரர்களை அவர் பக்கம் திருப்பியது. குறிப்பாக மன்மோகன் தாஸ், ரத்தன்சேத் டாடா, ராம்ஜி ஆகிய மூவரும் சேர்ந்து ரூபாய் ஐந்து லட்சம் வரை முதலீடு செய்ய முன் வந்தனர். இதையும் பால்கே மறுத்தார். பால்கே, ஆப்தே என்ற ஜவுளித்தொழில் செய்யும் அதிபரின் உதவியுடன் இந்துஸ்தான் பட நிறுவனத்தை தொடங்கினார். 1918ல் தொடங்கிய இந்துஸ்தான் பிலிம் கம்பெனி 97 படங்களை எடுத்தது.  அவற்றில் 40க்கும் மேற்பட்டவை அவரே இயக்கியவை.1937ல் கங்காவர்தன் என்ற பேசும் படத்தை இயக்கினார். தனது 74வது வயதில் 1944 பிப்ரவரி 16ல் மரணமடைந்தார்.

தென்னிந்தியாவை பொருத்தவரையில் சினிமா என்பது ஆர்.நடராஜ முதலியாராலேயே தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சைக்கிள் உதிரிபாகங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நடராஜ முதலியார், தொழில் வளர்ச்சியின் காரணமாக அமெரிக்க கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடத்தொடங்கினார். அப்போது தொழில்காரணமாக பம்பாய் சென்ற அவர், அங்கு மெளனப்படங்கள் குறித்து அறிந்து கொண்டார். இதை எப்படியும் நம்ம ஊர்களில் உருவாக்கவேண்டும் என்று முனைப்பு கொண்ட அவர் 1917ல் சென்னையில் இந்தியன் பிலிம் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினார். லண்டனிலிருந்து ஒளிப்பட கருவிகளை வாங்கிவந்தார். தனது நண்பர் ஜகனாத ஆசாரியை ஒளிப்பதிவு கற்றுக்கொள்வதற்காக பூனாவிற்கு அனுப்பி வைத்தார். கீசக பதம் என்ற படத்தை முதலில் உருவாக்க எண்ணி வேப்பேரி சாலையில் உள்ள ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிக நடிகைகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தப்படத்தை உருவாக்கினார். 6000 அடிக்கு சுமார் ரூ.35000 செலவில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குக்கொடுத்தது. மாகத்மா காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி இந்தப்படத்தின் இந்தி மொழி உரையாடல்களுக்கான வசனங்களை எழுதிக்கொடுத்தார். இந்தியா முழுவதும் ஓடிய இந்தப்படம் மிகப்பெரும் வெற்றியைப்பெற்றது. ரூ.50000 வரை வசூல் செய்து, முதலியாரின் அடுத்த படத்திற்கான பணிகளுக்கு அவரை உத்வேகப்படுத்தியது. திரெளபதி வஸ்திராபரணம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா போன்ற பல வெற்றிப்படங்களை தனது வாழ்நாளில் நாடராஜ முதலியார் உருவாக்கினார். பால்கே என்ற கலைஞனால் உருவாக்கிய முதல் இந்தியப்படக்கலை, மூண்றாண்டுகளுக்குள் தென்னிந்தியாவிற்கு வரும்பொழுதே அது வணிகம் செய்து கொண்டிருந்த நடராஜ முதலியார் மூலமாகவே வந்தது. இப்போது விளங்கும் ஏன் இந்திய சினிமாத்துறை கலைத்துறையாக மட்டும் இல்லாமல், பெரும் வணிகத்துறையாக இருக்கிறது என்று. இதன் விளைவு இன்று இந்திய சினிமாவின் மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும் என இந்தியாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்திய சினிமாவின் தற்போதைய வர்த்தக மதிப்பு 3.2 பில்லியன் டாலர் ஆகும்.  ஆனால் எந்த டாலர் முதலீடுகளும் பதேர்பாஞ்சாலி அளவிற்கான படங்களைத்தரவில்லை; தராது என்கிற உண்மை நமக்கு மீண்டும் மீண்டும் புலப்படுத்திக்கொண்டே வருகிறது.

100 ஆண்டுகளுக்கு முன் பால்கே தொடங்கி வைத்த பயணம் இன்று மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் சினிமா தற்போது பொழுதுபோக்கு, விஷுவல் எபெக்ட், பயணம், மற்றும் சுற்றுலா, மற்றும் சினிமா கல்வி என பல துறைகளாக பரிணமிக்கிறது. இன்று இந்திய சினிமா அதித படங்களை தயாரிப்பது மட்டுமல்ல உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் இயக்குனர்களை கொண்டுள்ளது. சத்யஜித்ரே, மிருணாள்சென், ரித்விக் கட்டாக், கிரஷ்காசரவல்லி, சியாம்பெனகல், அடுர்கோபாலகிருஷ்ணன், ஜி.அரவிந்தன், தமிழகத்தை சேர்ந்த கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் போன்றவர்களின் மாறுபட்ட பங்களிப்பினால் இந்திய சினிமா உயரத்தைத்தொட்டிருக்கும். உலகின் 100 சிறந்த திரைப்படங்களில் கமல்ஹாசன் நடித்து, மணிரத்னம் இயக்கிய படம் இடம் பிடித்துள்ளது. மேலும் உலகின் 25 விளையாட்டு திரைப்படங்களில் அமீர்கான் நடித்த லகான் இருப்பது இந்திய சினிமா தொட்ட உயரத்தின் அடையாளம்.


            சுதந்திரதினம்,குடியரசு தின ஊர்வலத்தின் போது ராணுவபலத்தையும்,கலாசார சிறப்புகளையும்,அரசு சாதனைகளையும் சித்தரித்து வாகன அணிவகுப்பு நடைபெறும்.  கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடக்கும்.இதுவரை இந்த ஊர்வலங்களில் நடிகர், நடிகைகள் பங்கேற்க அனுமதி வழங்கியதில்லை.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா 2012-13ஐ கவுரவிக்கும் வகையில், வரும் ஜனவரி 26-ல் நடக்கவுள்ள குடியரசு தின ஊர்வலத்தில் நடிகர்,நடிகைகள் பங்கேற்பது குறித்து திரை உலகத்தினருடன் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஊர்வலத்தில் முன்னணி நடிகர்களுடன் பழம்பெரும் நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

பொருளாதாரம், எண்ணிக்கை, அரசின் ஆதரவு என்று இப்படி பல்வேறு முனைகளில் இந்த நூறாண்டில் இந்திய சினிமா வளர்ந்திருந்தாலும் கூட இன்னும் இந்திய சினிமா உயரவேண்டிய அளவும், உலக சினிமா இன்று எட்டியுள்ள அளவையும் அடைய அது பெரும் பயணத்தைச்செய்ய வேண்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சினிமாவும், அதிக பொருள் செலவிலான சினிமாவும் ஒரு சமூகத்தின் சினிமா தரம் குறித்து பேசுவதற்கான அளவு கோள்கள் அல்ல. தாதா சாகேப் பால்கே அவர்களுக்கு இருந்த சினிமா மீதான ஈடுபாடு என்பதில் சிறிதேனும் இன்று உள்ள இயக்குனர்களிடம் இருக்குமாயின் இந்த நூற்றாண்டு இந்திய சினிமாவிற்கான  நூற்றாண்டாக மலர வாய்ப்புள்ளது. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம்மட்டுமல்ல, சமூகமாற்றத்திற்கான கருவியும் கூட. பட்டாணிச்செடியிலிருந்து தனது பயணத்தை துவங்கிய இந்திய சினிமா தனது அளவு மாற்றம் மட்டும் இல்லாமல் குணமாற்றமும் பெற்று வளர்ந்தால் தான் அது உண்மையான வளர்ச்சி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் உள்ள புதிய இயக்குனர்கள் இந்தப் பயணத்தை தொடரவேண்டும் என்பது தான் நமது விருப்பம்.
 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates